ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

மரீன் ஹெட்லேண்ட்ஸ் (Marine Headlands)

இந்த வாரம் போன இடம் மரீன் ஹெட்லாண்ட்ஸ். சான் ஃப்ரான்சிஸ்கோ கோல்டன் கேட் பிரிட்ஜ்ஜில் இருந்து ஒரு 15 நிமிட டிரைவ் தூரத்தில் இருக்கிறது. கோல்டன் கேட் பிரிட்ஜ் தாண்டியவுடன் அடுத்த எக்ஸிட் எடுத்து நேராக சென்று வரும் அடுத்த இடது புறம் திரும்பினால் ஒரு டனல் வரும். அது ஒரு வழி குகைப்பாதை. 5 நிமிடம் சிக்னலில் நின்று குகைப்பாதை வழியே சென்று, குண்டும் குழியுமான பாதையில் 15 நிமிடம் சென்றால் இந்த இடத்தை அடையலாம்.

அங்கு உள்ள பீச்சை (ரோடியோ பீச்) அடைவதற்கு பல வழிகள் உள்ளது. அந்த ரோட்டிலேயே நேராகச்சென்றால் பீச் சுக்கு அருகே வரை காரிலேயே போய் விடலாம். ஆனால் அதில் அவ்வளவு சுவாரசியம் இல்லை. அடுத்து வரும் இடது வளைவில் திரும்பினால், விசிட்டர் செண்டர் வரும். அங்கு காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள டிரையல் வழியே ஒரு 20 நிமிடம் நடந்தால் பீச்சை அடையலாம். இந்த டிரையல் மரங்களும் செடி கொடிகளும் உள்ள ஒரு நடை வழி. ஒரு சிறு மலையில் ஏறி இறங்கினால் பீச் வந்துவிடும்.

நான் சொல்லப்போகும் இன்னொரு வழி இன்னும் சுவாரசியமானது. விசிட்டர் செண்டரில் காரை நிறுத்தாமல் இன்னும் நேராகச் சென்று அடுத்த வலது புறம் திரும்பி, காரை அங்கு பார்க் செய்து விட்டு அங்கிருந்து நடந்து சென்றால் ஒரு மலைப்பாதை வரும். அது வழியாகச்சென்றால் மிக அருமையான பீச்சின் ஏரியல் வியூ பார்த்துக்கொண்டே பீச்சை அடையலாம். அந்த வியூவில் ஒரு மலை, சீல் விலங்கு படுத்திருப்பது போலவே இருக்கும். இந்த பாதையில் சற்று கவனமாகச் செல்ல வெண்டும். ஆனால் மிக அருமையான வியூ உறுதி.

இந்த பீச்சில் உள்ள மணல் மற்ற பீச் மணல் போல இல்லாமல் சற்று உறுதியானதாக இருக்கும். ஆனால் மிகச்சுத்தமாக அழகாக கூட்டமே இல்லாமல் இருக்கும். நன்றாக அனுபவிக்கலாம். சிறுவர்களும் நன்றாக அனுபவிப்பார்கள்.

எச்சரிக்கை இங்கு சாப்பிட எதுவும் கிடைக்காது. அதனால் தேவையான அளவு சாப்பாடோ நொறுக்குதீனியோ கொண்டு செல்லவும்.

கீழே மரீன் ஹெட்லேண்ட்ஸ்ஸில் எடுத்த சில புகைப்படங்கள்.



IMG_4955IMG_4954IMG_4953IMG_4952IMG_4951IMG_4950
IMG_4949IMG_4948IMG_4947IMG_4946IMG_4945IMG_4939
IMG_4938IMG_4937IMG_4907IMG_4877IMG_4867IMG_4866
IMG_4865IMG_4833IMG_4832IMG_4786IMG_4785IMG_4784

Marine Headlands, a set on Flickr.

சனி, 20 ஏப்ரல், 2013

பாரடைஸ் பிரியாணி பாய்ண்டே' -- சாண்டா கிளாரா

ஆபிஸ்ல ஒரு கொல்டி பாரடைஸ் பிரியாணி புகழ் பாடிகிட்டே இருந்தான். அவன் இப்பத்தான் சியாட்டில் ல இருந்து பே ஏரியாவுக்கு வந்திருக்கான். அவனுக்குக் கூட தெரிஞ்சிருக்கு நமக்குத் தெரியலயேன்னு கொஞ்சம் அவமானமா இருந்துச்சு. சரி இன்னைக்கு போயிரலாம்னு டின்னருக்கு குடும்பத்தோட போனோம். வழக்கமான பே ஏரியா தேசி ரெஸ்டாரெண்ட் கள் போல இல்லாம கொஞ்சம் டீசண்டாவே இருந்தது. என்ன ஒரு பிரச்சனைன்னா சாண்டா கிளாரா மற்றும் ஃப்ரீமாண்ட் ல தேசி ரெஸ்டாரெண்ட் கள் கொஞ்சம் டீசண்டா இருந்தா சரியா ஓட மாட்டேங்குது. இது எப்படின்னு பாக்கலாம்!
மொதல்ல பிரியாணி : கோட் பிரியாணி ஆர்டர் பண்ணினோம். கறி நல்லா வெந்துதான் இருந்தது. ஆனால் பிரியாணி ஆகா ஓகோன்னு ஒன்னும் இல்ல. சுமார்தான். காரமும் அவ்வளவு இல்ல. ஹைதராபாதி தம் பிரியாணின்னவுடனே கொஞ்சம் காரமா எதிர்பார்த்தேன். அந்த அளவு இல்ல. பிரியாணிக்கு குடுத்த கிரேவியும் அவ்வளவு ருசியா இல்ல. 
அப்புறம் பசங்களுக்கு சிக்கன் 65 மற்றும் பன்னீர் 65. இந்த தெலுங்கு ரெஸ்டாரெண்ட்ல எல்லாம் சிக்கன் 65 நம்ம ஊரு மாதிரி லெக் பீஸ் வருத்து இருக்கிறது இல்ல. நம்ம சில்லி சிக்கன் மாதிரி குடுக்கிறாங்க. சில தடவை இந்த மாதிரி வீட்டுக்கு ஆர்டர் பண்ணி எடுத்துட்டு போயி, மாத்தி குடுத்திட்டாங்களோன்னு நெனச்சிருக்கேன். இங்க சிக்கன் 65, பன்னீர் 65 நல்லாவே இருந்தது. பசங்களும் கொஞ்சம் காரமா இருந்தாலும் ரசிச்சு சாப்பிட்டாங்க. கார்லிக் நான், பட்டர் சிக்கன் காரம் இல்லாம நல்லா இருந்தது. பசங்க ஒரு பிடி பிடிச்சாங்க.


எல்லாம் சாப்பிட்டு முடிச்சுட்டு (பன்னீர் 65, பட்டர் சிக்கன், நான் -- சாப்பிட்டு முடிக்க முடியல -- பாக்ஸ் பண்ணிகிட்டோம்) ரெண்டு தம்ஸ்-அப் -- அதோட ருசியே தனிதான்! எல்லாம் சேர்த்து $50 ஆனது. 

சர்வீஸ் நல்லாவே இருந்தது. நாங்க போகும்போது மணி 8:15 இருக்கும். அவ்வளவா கூட்டம் இல்ல. ஆனா நிறைய டு கோ ஆர்டர்கள் இருந்தது. கொஞ்சம் பந்தாவா ஐ பேட் ல ஆர்டர் எடுத்தாங்க. சாப்பாடு ரொம்ப நேரம் காக்க வைக்காம சீக்கிரமே வந்தது. ருசிச்சு சாப்பிட முடிந்தது. டிவி ல ஏதோ இந்தி பாட்டு ஓடிக்கிட்டு இருந்தது. வழக்கம் போல ரெண்டு மூணு தேசிகளும், சர்வ் பண்ண க்ளீன் பண்ண சில மெக்ஸிகன்களும் இருந்தாங்க.

வெள்ளி, சனிக்கிழமைகள்ல ராத்திரி 12 மணி வரைக்கும் தொறந்திருக்கும்னு போட்டிருந்தது. எப்பயாவது டிரை பண்ணனும்.

நிச்சயமா திரும்ப போகிற மாதிரி, ஃப்ரெண்ட்ஸ் க்கு ரெகமண்ட் பண்ற மாதிரியும் உள்ள ரெஸ்டாரெண்ட் தான். டிரை பண்ணலாம்.

புதன், 3 ஏப்ரல், 2013

அம்மாவின் கை பேசி

சாந்தனு உருப்படாமல் ஊர் சுற்றிக்கொண்டு சின்ன சின்ன திருட்டு என்று இருப்பவர். எட்டு பிள்ளைகளில் கடைக்குட்டி. அம்மாவின் செல்லப்பிள்ளை. சற்றே திருந்தி வரும் வேளையில் வீட்டில் ஒரு நிகழ்ச்சியில் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு, அம்மாவாலேயே விளக்குமாற்றால் அடித்து விரட்டப்படுகிறார். மனதுக்குப்பிடித்த அத்தை பெண் வேறு.

பல வருடங்கள் கடுமையாக உழைத்து ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்து அம்மாவையும், காதலியையும் கூட வைத்துக்கொள்ள நினைக்கும் வேளையில் சில சம்பவங்களால் எதுவும் நடக்காமல் போய்விடுகிறது. என்ன சம்பவங்கள், அம்மா, காதலிக்கு என்ன ஆகிறது, சாந்தனுவுக்கு என்ன ஆகிறது என்பதை பல குழப்பங்களுக்கிடையே சொல்லி முடிக்கிறார் தங்கர்பச்சான்.

சாந்தனு நடிப்பு என்றால் என்ன விலை என்று கேட்கிறார். சில உணர்ச்சிவசமான காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்து நமக்கு எரிச்சல்தான் வருகிறது. அதிலும் வீட்டை விட்டு விரட்டப்படும் காட்சியில் சும்மாவே நிற்கிறார். பாக்கியராஜ் தாவணிக்கனவுகளில் ஒரு காட்சி நடித்துக்காண்பிப்பாரே அதை அப்படியே செய்திருந்தால் கூட போதும் அவ்வளவு உணர்ச்சிகரமான காட்சி. யாருக்கோ எதுவோ நடப்பது போல நிற்கிறார்.

அருமையான பாத்திர அமைப்பு அவரது முதலாளியாக நடிக்கும் இயக்குநருக்கு. அவரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அதன் பிறகு தங்கர்பச்சானின் மனைவியாக வரும் மீனாள். அம்மாவாக நடித்தவரும் பரவாயில்லை.

இசை எடுபடவேயில்லை.

அம்மாவின் கை பேசி -- சிக்னல் சரியில்லை.

ஞாயிறு, 31 மார்ச், 2013

ஹரிதாஸ்

உலகில் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் குறைபாடு உள்ளவர்கள்தான். ஆட்டிசம் என்பது ஒரு வியாதி அல்ல ஒரு குறைபாடு மட்டுமே, அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற கருத்தை என்கவுண்டர் செண்டிமெண்ட் நகைச்சுவை குத்துப்பாட்டு என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.

எவ்வளவு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக இருந்தாலும் ஜனரஞ்சக முறையில் சொல்லப்படவில்லையென்றால் கவனிக்கப்படாமலே போய்விடக்கூடிய அபாயத்தை தவிர்த்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். முதலில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத்தூண்டியது. அந்த ஆர்வத்தை கடைசி வரை கெடுக்காமல் காப்பாற்றியது. இவையே படத்தின் வெற்றிக்கு காரணங்கள். ​

கிஷோர் - அந்த போலீஸ் மிடுக்கும், பையனை புரிந்துகொள்ள முடியாமல் படும் அவஸ்தையும், பையனைக்காணவில்லையென்றதும் படும் வேதனையும் மிகச்சிறப்பு. ​

ஸ்நேகா - ஆசிரியையாக பாந்தமான நடிப்பு. ​ பையன் - பெயர் தெரியவில்லை. உண்மையில் ஆட்டிசம் உள்ள இந்திய சிறுவர்களை வெகு குறைவாகத்தான் பார்த்திருக்கிறேன். அப்படி பார்த்த வரையில் அவர்களது முகமே சற்று வித்தியாசமாக இருக்கும். அது இந்த பையனிடம் பார்க்க முடியவில்லை. மற்றபடி ஓகே. அஞ்சலி யில் ஷாமிலி க்கு ஆட்டிசமா? சந்தேகம்.

இசை - பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசை காட்சிக்குத் தேவையான உணர்வுகளைக் கொடுக்கிறது.

இயக்கம் - எந்த இடத்திலும் தொய்வடையாத திரைக்கதையால் நல்ல பொழுதுபோக்காகவும் பரபரப்பாகவும் இருக்கிறது.

குடும்பத்தோடு ஒரு முறையாவது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.

வெள்ளி, 8 மார்ச், 2013

தாயுமானவன் - பாலகுமாரன்

ஒரு ஆண் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியம், அதை விட ஒரு வீட்டில் ஒரு ஆண் சம்பாதிக்க முடியாத நிலையில் அந்த வீட்டுப் பெண் சம்பாரிப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் என்பதை பரமு என்ற நடுத்தர மனநிலை ஆணின் மனதின் வழியாக விவரிக்கிறது 'தாயுமானவன் '
பரமு ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலை யில் வேலை பார்க்கும் தொழிலாளி மற்றும் தொழிற்சங்கத் தலைவன் . தொழிலாளிகளின் பிரச்சினைகளை நிர்வாகத்தோடு பேசி சுமூகமாகத் தீர்ப்பதில் வல்லவன். இதனால் இரு தரப்பினரிடமும் நல்ல பெயர் வாங்கிய புத்திசாலி. அன்பான அனுசரணை யான மனைவி,  பாசத்தைப்பொழியும் மகள் , மகன். அவர்களோடு தினந்தோறும் கழியும் மாலை வேளைகள், வார இறுதி என்று இருக்கும் ஒரு நடுத்தர குடும்பஸ்தன்.
நிர்வாகத்தின் கவனக்கோளாறால் ஏற்படும் ஒரு பிரச்சினை யை சரி செய்ய அவன் எடுக்கும் ஒரு முடிவால் ஏற்படும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவனைத்தூக்கி கொண்டாடிய தொழிலாளர் களையும் நிர்வாகத்தையும் விட்டுக்கொடுக்க முடியாமல் பிரச்சினை க்கு தானே வலிய பொறுப்பேற்று வேலையை விட்டு விடுகிறான்.
அதிலிருந்து ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து அவனுக்கு பம்பாயில் வேலை கிடைத்து போகும் வரை பரமனின் நிலையிலிருந்து சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். பக்கத்து வீட்டு பாலியல் பிரச்சனைகள், மகள் பருவம் எய்தியிருக்கும் சூழ்நிலையில் அனைவரும் பெண்ணின் தாயை மட்டுமே தேடுவதிலிருந்து, பல்வேறு சூழ்நிலைகள் நேரில் பார்த்தது போலவே இருக்கிறது.
நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு நாவல்.

Special 26 (Hindi)


சாண்டாக்ளாரா - ல ஏ எம் சி மெர்காடோ என்று ஒரு 20 தியேட்டர் காம்ப்ளக்ஸ். அதுல இப்பல்லாம் 2,3 இந்தி, தெலுங்கு படங்களாவது ஓடுது. $6 க்கு (தினமும் மதியம் 12 மணிக்குள்ள) நல்ல தியேட்டர்ல நல்ல சவுண்ட் சிஸ்டத்தில, கூட்டமே இல்லாம படம் பார்க்கலாம் (மொத்தமே 4 பேர்தான் இருந்தோம்). அங்கதான் இந்த படம் பார்த்தேன்.



உண்மைக்கதை என்று சொல்லாவிட்டால் கொஞ்சம் கூட நம்ப முடியாத கதை. 1980 களில் சிபிஐ என்று சொல்லி மத்திய அமைச்சர், பிரபல நகைக்கடை என்று ஏறத்தாழ 50 இடங்களில் கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல். அதுவும் நான்கே பேர். நிகழ்ச்சிகள் எல்லாமே உண்மையா அல்லது ஒரு வரி செய்தியை வைத்து கதையா என்று தெரியவில்லை. அதிலும் பிரபலமான ஒரு ஓட்டலில் சிபிஐ க்கு ஆள் எடுப்பதாக நேர்முகத்தேர்வு எடுப்பதெல்லாம் எப்படி நடந்திருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் சினிமாவைப் பொறுத்த வரை ரொம்ப ஆராயாமல், இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்தால் விறுவிறுப்புக்கு கியாரண்டி.



அக்சய்குமார், அனுபம் கெர் அப்புறம் 2 பேர் (பெயர் தெரியவில்லை) அவ்வளவுதான் டீம். அது போக கதாநாயகி என்று பேருக்கு அழுவாச்சி காஜல் அகர்வால், ஏமாந்த போலீஸ் ஒருவர், ஒரு பெண் போலீஸ், நிஜ சிபிஐ ஆபீசராக மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவரது உதவியாளர். அக்சய் குமார் இதில் செம ஹாண்ட்சம். அனுபம் கெர் எனக்கு இந்தி படம் தெரிய ஆரம்பித்ததில் இருந்து அப்படியே இருக்கிறார். இருவரும் ரோலுக்கு சரியான பொறுத்தம். அதிலும் அனுபம் கெர் சிபிஐ அதிகாரியாக காட்டும் மிடுக்கும், கும்பஸ்தனாக சாமானியனாகவும் நல்ல மாற்றம்.



இசை : ஒரு பாடலும் கேட்கிற மாதிரி இல்லை. படம் பூராவும் லூப்பில் போட்டுவிட்ட மாதிரி ஒரே மாதிரியான பின்னணி இசை.

சில இடங்களில் சுவாரசியமான வசனங்கள் (அனுபம் கெர் தனது குடும்பத்தை அறிமுகப்படுத்தும்போது -- அவ்வளவுதானா? - அக்சய் குமார். என்னப்பா செய்யிறது, வீட்டுல டிவி இல்லையே! - அனுபம் கெர்).

இந்தி படங்கள்ல தமிழன காட்டுனா ஒண்ணு அவன் தயிர் சாதம், சாம்பார் சாதம் சாப்பிடுறவனா இருப்பான். இதுல பாட்ஷா வசனம் பேசுகிறான்.

கிளைமாக்ஸ் ல இதுதான் நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சாலும் அது நடக்கும் விதம் சுவாரஸ்யம்.

அவ்வளவு பணத்தையும் என்ன செய்யிறாங்கன்னே தெரியல. எல்லாரும் வழக்கம் போலத்தான் இருக்காங்க. சரி உண்மையில என்ன நடந்ததுன்னு இயக்குநருக்குத் தெரியாதுன்னு வச்சுக்கலாம்.


கொசுறு: இந்த சினிமா காம்ப்ளக்ஸ் ல 'தந்தூரி அவன்' ரெஸ்டாரெண்ட் ஒண்ணு இருக்குது. அங்க 'சாக் சிக்கன்' வித் நான் -- சூப்பரா இருக்கு!

ஞாயிறு, 4 நவம்பர், 2012

பீட்சா - திரைப்பட அனுபவம்


சேர்ந்து வாழ்ந்தாலும் சராசரி கணவனுக்குரிய எதிர்பார்ப்புகளுடன் (அதெல்லாம் ஒரு காலம்... ம்ஹூம்...) துணைவியை துணியை துவைத்துப்போடும், சமைத்துபோடும், அணைத்துபோகும் ஒருத்தியாகவே பார்க்கும் ஒருவன். சிறு பீட்சா கடையில் வேலை பார்க்கிறான். பிரபல எழுத்தாளராகத்துடிக்கும் துணைவி. எதிர்பாராத விதமாக குழந்தை உருவாக (!!), வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று குழப்பத்தில் இருப்பவருக்கு நடக்கும் சில அமானுஷ்ய அனுபவங்கள் (!!) அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்று சிறு குழப்பம் கூட இல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். 

வாழ்த்துகள் கார்த்திக் சுப்புராஜ்!

இந்த படத்தை பார்த்துதான் அனுபவிக்க வேண்டும், ஆராயக்கூடாது!!